இரத்தப்பெருக்கின் வகைகள்
இரத்த பெருக்கு இரண்டு வகைப்படும்.
உட்புற இரத்த பெருக்கு
உடற்கலங்கள் பாதிக்கப்பட்டு உடலிற்கு உள்ளே இரத்த பெருக்கு ஏற்படுமாயின் அது உட்புற இரத்த பெருக்கு எனப்படும். இதனை எளிதாக அடையாளம் கண்டு கொள்ளல் கடினம். உட்புற இரத்த பெருக்கில் பின்வரும் மாற்றங்கள் நிகழும்.
- வீக்கம்
- நிறம் மாறுதல்
- வலி்
- இடம் சூடாதல்
வெளிப்புற இரத்த பெருக்கு
உடற்கலங்கள் பாதிக்கப்பட்டு உடலிற்கு வெளியாக இரத்தம் வெளியேறுமாயின் அது வெளிப்புற இரத்த பெருக்கு எனப்படும். இவ்வகையான இரத்த பெருக்கு, வாய், மூக்கு, காது,யோனி, குதம் போன்ற இயற்கையாக அமைந்த துவாரங்கள் மூலமாகவோ, அல்லது தோலில் ஏற்படும் பிளவுகள் காயங்கள் மூலமாகவோ ஏற்படலாம். வெளிப்புற இரத்த பெருக்கை நேரடியாகப் பார்த்து அறிந்து கொள்ள முடிவதால், இரத்தம் வெளியேறும் அளவைப் பார்த்து மதிப்பீடு செய்து, தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம்.
முதலுதவி
இரத்த பெருக்கில், இரத்தம் வெளியேறும் அளவு, இரத்த பெருக்கு ஏற்பட்ட இடம் போன்ற நிலைகளைப் பொறுத்து முதலுதவி முறைகளும் வேறுபடும்.
- உடலில் பொருட்கள் ஏதேனும் குத்திய நிலையில் இருப்பின், அதிலிருந்து இரத்த பெருக்கு ஏற்படும் ஆபத்தைத் தவிர்க்க, அதை அகற்றாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
- வெளிப்புற இரத்த பெருக்கு எளிதாக அடையாளம் காணப்படக் கூடியது. காயமேற்பட்ட இடத்தை உயர்த்தி வைத்திருத்தல் வேண்டும்.
- வெளிப்புற இரத்த பெருக்கு அதிகளவில் இருப்பின், மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
- உட்புற இரத்த பெருக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய சூழ்நிலையில், நோயாளி சுயநினைவுடன் இருந்தால், இரத்த பெருக்கின் விளைவால், மயக்கத்தில் நோயாளி கீழே விழுந்துவிடாமல் தடுக்க, கிடையாகப் படுக்கவைத்து மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
- நோயாளி சுயநினைவு இல்லாமல் இருப்பினும், சுவாசிப்பாராயின் முதலில் சுவாசம் தடைப்படாமல் மீளுயிர்ப்பு நிலைக்கு நோயாளியைக் கொண்டுவருதல் வேண்டும். அதன் பின்னரேயே இரத்த பெருக்கைக் கட்டுப்படுத்தல் வேண்டும்.
- நோயாளி சுயநினைவு இல்லாமல், சுவாசமும் இல்லாமல் இருந்தால் முதல் சுவாசம் திரும்பும் வரை மீளுயிர்ப்புச் சுவாசம் வழங்கவேண்டும். அதன் பின்னரேயே இரத்த பெருக்கைக் கட்டுப்படுத்த வேண்டும்.