விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, October 5, 2011

கலீல் ஜிப்ரானின் - கடவுளின் முட்டாள்







ஒரு முறை பாலைவனத்தில் இருந்து “சரியா“ என்னும் பெருநகரத்திற்கு கனவு காணும் மனிதன் ஒருவன் வந்தான். அங்கி, ஊன்றுகோல் தவிர அவனிடம் வேறு எதுவும் இல்லை.

அவன் தெருக்கள் வழியே நடக்கும் பொழுது ஆலயங்களையும், கோபுரங்களையும், அரண்மனைகளையும் அதிசயத்துடனும், வியப்புடனும் உற்று நோக்கியவண்ணம் நடந்தான். ஏனெனில் சரியா நகரம் பிரமிப்பூட்டும் அழகுநகரமாகும்.

அவன் தன்னைக் கடந்து செல்லும் மக்களிடம் அவர்களது நகரம் குறித்துக் கேள்வியெழுப்பியபடி அடிக்கடி பேசினான். ஆனால் அவர்கள் அவனுடைய மொழியை அறியவில்லை. அவனும் அவர்களுடைய மொழியைப் புரிந்துகொள்ளவி்ல்லை.

பகற்பொழுதில், ஒரு பரந்த உணவகம் முன் நின்றான். சலவைக் கல்லால் கட்டப்பட்டிருந்தது. யாதொரு தடையுமின்றி மக்கள் அந்த விடுதியுள் சென்றும் வந்தும் கொண்டிருந்தனர்.

அவன் தனக்குள் சொல்லிக்கொண்டிருந்தான்….

“இது ஒரு புனிதத் தலமாய் இருக்கும்!” 
அவனும் அதன் உள்ளே சென்றான்.

வெகு ஆடம்பரமான அந்தப் பெருமண்டபத்தில் அவன் அதிசயமாய்ப் பார்த்ததென்னவெனில், பல மேசைகளைச் சுற்றி ஆண்களும், பெண்களுமாய் பெருங்குழுவாய் அமர்ந்திருந்தனர். அவர்கள் உண்பதும், குடிப்பதும் இசைக்கலைஞர்களின் இசையைக் கேட்பதுமாய் இருந்தனர்.

“இல்லை“ கனவுகாணும் மனிதன் சொன்னான்..

”இது தொழுகை செய்வதன்று. இது இளவரசனால் ஒரு பெருமைமிகு நிகழ்ச்சியைக் கொண்டாடு முகத்தான் மக்களுக்கு வழங்கப்படும் விருந்தாகும்.!“

அந்தநேரத்தில் இளவரசனின் அடிமையாக இருக்கக்கூடிய ஒரு மனிதன் அவனை நெருங்கி அமருமாறு பணிவுடன் வேண்டினான். இறைச்சியும், மதுவும் சுவைமிகு இனிப்புகளும் அவனுக்கு அளிக்கப்பட்டன.

நிறைவாகவும், மகிழ்சியாகவும் உண்டபின், அங்கிருந்து செல்ல அந்த கனவுகாணும் மனிதன் எழுந்தான். வாசலில் ஆடப்பரமாய் உடையுடுத்தியிருந்த மிகப் பெரும் உருவம் கொண்ட ஒரு மனிதனால் அவன் நிறுத்தப்பட்டான்.

கனவு காணும் மனிதன் தனக்குள் “நிச்சயமாய்“ இவன் இளவரசனாய் இருப்பான்! என்று சொல்லிக்கொண்டு, அவன் முன் தாழ்ந்து நன்றி தெரிவித்தான்.

அந்தப் பெருமனிதன் நகரத்து மொழியில் பேசினான்……….
“ஐயா நீங்கள் உண்ட உணவிற்குப் பணம் தரவில்லை!“

அதைப் புரிந்துகொள்ளாத கனவுகாணும் மனிதன், மீண்டும் உளபூர்வமாக நன்றி கூறினான். பின்னர் அந்தப் பெருமனிதன் சற்று யோசித்தவாறு அவனை நெருங்கி உற்று நோக்கினான்.

அந்தக்கனவுகாணும மனிதன் ஓர் அந்நியனாய் அந்த நகரத்திற்குப் புதியவனாய், எளிய ஆடை அணிந்திருந்ததைப் பார்த்தான். உண்மையில் உணவிற்காகக் கொடுக்கும் அளவிற்கு அவனிடம் பணம் இல்லை.

அந்தப் பெருமனிதன் தன்கைகளைத் தட்டி அழைக்க, அந்நகரத்து நான்கு காவலர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பெரும்மனிதனின் பேச்சைக் கேட்டபின் கனவுகாணும் மனிதனை இருபுறமும் இருவராய் சூழ்ந்து தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

கனவுகாணும் மனிதன் அவர்களது ஆடம்பர அங்கிகளைக் கவனித்தான். அணிந்திருந்த விதம் நோக்கினான். அவர்களை மகிழ்வுடன் பார்த்தான்.

பிறகு சொன்னான்……. “இவர்கள் சிறப்பான மனிதர்கள்!

நீதி மன்ற வாசல் வரை ஒன்றாய் நடந்துவந்து உள்ளே நுழைந்தனர்.

அரசஉடையில் நீண்டு தொங்கும் தாடியுடன் வயதான மதிப்பிற்குரிய மாமனிதன் சிம்மாசனம் மீது அமர்ந்து இருப்பதைக் கண்டான் கனவு காணும் மனிதன். அவன் ஓர் அரசனாய் இருப்பான் என்று நினைத்து அந்த அரசன் முன் தன்னை நிறுத்தியதற்காக ஆனந்தப்பட்டான்.
இப்போது காவலளிகள் அந்த மதிப்பிற்குரிய மாமனிதனாகிய நீதிபதிமுன் கனவுகாணும் மனிதனுக்கெதிரான குற்றத்தை விவரித்தனர். நீதிபதி இரு வழக்குரைஞர்களை நியமித்தார். குற்றத்தைத் தாக்கல் செய்ய ஒருவரையும், அந்த அந்நியனைத் தற்காக்க மற்றொருவரையும்.

வழக்கறிஞர் இருவரும் எழுந்து ஒருவர் மாறி ஒருவர் தத்தமது வாதத்தை முன் வைத்தனர். அந்நியனான அந்தக் கனவுகாணும் மனிதன் வரவேற்புரையைக் கேட்பதாகத் தன்னுள் நினைத்துக்கொண்டான். அவன் இதயம தனக்காகச் செய்யப்படும் இந்த எல்லாவற்றிற்கும் அரசன் மீதும் இளவரசன் மீதும்நன்றிப் பெருக்கால் நிரம்பி வழிந்தது.


பின்னர் கனவு காணும் மனிதன் மீதான தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஒரு மரப்பலகையில் அவன் குற்றம் எழுதப்பட்டுக் கழுத்தில் தொங்கப்படவேண்டும் என்றும், நகரம் முழுவதும் பகிரங்கமாக அறிவிக்கும் வண்ணம் ஊதுகொம்பு வாசிப்பவனும், முரசு அறைபவனும் அவன் முன் செல்ல ஒரு வெறுங்குதிரைமீது ஏறி நகரம் முழுவதும் வரவேண்டும் என்பதான தண்டனை. அது உடனடியாக நிறைவேற்றப்பட்டது.

இப்போது கனவுகாணும் மனிதன் இவ்வாறான தண்டனைக்கு ஆளாகி நகரைச் சுற்றிவரும் போது ஊதுகொம்பு மற்றும் முரசின் ஒலி கேட்டு நகரவாசிகள் அவன் முன் ஓடிவந்தனர். அவனைப் பார்த்து எல்லோரும் சிரித்தனர். குழந்தைகள் கூட்டமாய் தெருத்தெருவாக அவன்பின் ஓடினர். கனவுகாணும் மனிதனின் இதயம் மெய்மறந்த மகிழ்ச்சிப் பரவசம் கொள்ள, அவர்களைப் பார்த்தான்.


அவனைப் பொருத்தவரை, கழுத்தில் தொங்கும் பலகை அரசனின் வாழ்த்து என்றும் தனக்கு மரியாதை செய்வதற்காக இந்த நகர் ஊர்வலம் என்பதாகவும் நினைத்தான்.
இவ்வாறு அவன் வரும்போது, அவனைப் போலவே பாலைவனத்திலிருந்து வந்த ஒரு மனிதனை, கூட்டத்தின் நடுவே பார்த்து மகிழ்ச்சியால் அவன் இதயம் துள்ள, சத்தம் போட்டுக் கத்தினான்.

“நண்பனே நண்பனே எங்கிருக்கிறோம் நாம்? என்ன மாதிரியான ஆனந்த நகரம் இது! எப்பேர்ப்பட்ட ஆடம்பர விருந்தோம்பும் மனிதர்கள்! தம் மாளிகைகளில் விருந்தாளியை உபச்சாரம் செய்வதும் இளவரசர் துணைவரவும், கழுத்தில் ஓர் அறிவிப்புப்பலகையைத் தொங்கவிட்டு, சொர்க்கத்திலிருந்து இறங்கிவந்த நகரத்தின் வரவேற்பு மரியாதையை அளிப்பதுமாய் எப்பேர்ப்பட்ட விருந்தோபசாரம்! எனக்கு இப்படியொரு வாய்ப்பா!
அந்தப் பாலைவன மனிதன் பதிலேதும் சொல்லாமல் புன்னகைத்தபடி தலையாட்டினான்.ஊர்வலம் கடந்து சென்றது. 

கனவு காணும் மனிதன் தலை நிமிர்ந்து முகம் தூக்க, அவனது கண்களில் ஒளி வழிந்தோடியது. 


புரிதல்…………..

இந்தக் கதையைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிந்தனை தோன்றும். இந்தக் கதையில் வரும் மனிதன் மட்டும் கனவுலகத்தில் கனவுகாண்பவனல்ல நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கனவுலகத்தில் வாழ்ந்து கனவு காண்பர்கள் தான் என்பதை சொல்லாமல்ச் சொல்கிரார் கலீல் ஜிப்ரான்.










---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்