தெரிந்த பெயர்கள் தெரியாத மருத்துவ பயன்கள்-1
அத்திக்காய் :- இதனால் பிரமேகம், வெட்டை, விரணம்,சூலை முதலியன நீங்கும், மலங்கழியும்.
அவரைப்பிஞ்சு :- இது இரவு போஜனத்திற்கும், மருந்துண்பவர்களுக்கும், திரிதோஷத்திற்கும் பத்திய உணவாகும்.
கத்திரிப்பிஞ்சு :- பித்தம், கபம் நீங்கும், காயாக இருப்பின் சிறிது உஷ்ணத்தைத்தரும்.
கொத்தவரை :- இது அபத்திய உணவாகும், மருந்தை முறிக்கும், பித்தாதிக்கம், பித்தவாயு, கபம் முதலிவைகளை உண்டாக்கும்.
சுண்டைக்காய் :- கைப்பு சுவையுள்ள காயால் , மார்புச்சளி, கிருமிநோய், வாதாதிக்கம் முதலியன குணமாகும். இதன் வற்றல் சீதபேதி,கிரகணி இவைகட்கு நன்று.
சுரைக்காய் :- இதனால் வாதபித்தம், மார்புநோய், புலிகநோய் முதலியன உண்டாகும். பத்தியத்திற்காகாது. சீதளமென்பர்.
பூசனிக்காய்:- இது உஷ்ணாதிக்கம்,மிகு பித்தம் இவைகளை நீக்கும். கபத்தையும் பசியையும் உண்டாக்கும். உடலுக்கு வன்மை தரும்.
பாகற்காய் :- இதனால் கிருமி நோய்,திரிதோஷகோபம், பாதரசதோஷம் முதலியன குணமாகும். விரேசனத்தையுண்டாக்கும்.
பீர்க்கங்காய் :- இதனால் பித்தமும், சீதளமும் அதிகரிக்கும்.
புடலங்காய் :- இதனால் பித்தம், கபம், சுக்கிலம் இவைகள் அதிகரிக்கும்.
முருங்கைக்காய் :- இதனால் கபம் நீங்கும். விந்து கட்டும், பத்திய உணவாம்.
வாழைக்காய் :- இதனால் வாந்தி பித்தம் பேதி இவைகள் குணமாகும் இரத்த விரித்தியையும் பலமும் உண்டாகும். வாதம் மிகும்.
வெண்டைக்காய் :- இதனால் அதிசாரம் , கிரகணி, சீதபேதி, முதலியன குணமாகும். விந்து கட்டும் கபவாதம் உண்டாகும்.
கலியாண பூசணிக்காய் :- உட்காய்ச்சல், பித்தம், மூத்திர கிரிச்சரம், அஸ்திதாது கதசுரம், இடுமருந்து தோஷம் முதலியன போம் வாதம் மிகும்.
வாழைப்பழம் :- இதனால் பாண்டு பித்தப்பிணிகள் முதலியன தீரும். அதிகமாக உண்ணில் மந்தத்தை உண்டாக்கும். மலத்தைப்போக்கும்.
பலாப்பழம் :- இதனால் வாதபித்த கபப்பிணிகள் யாவும் உண்டாகும். மிக்க உஷ்ணத்தையும், கரப்பானையும் உண்டாக்கும்.
மாம்பழம் :- இதனால் சொரி, சிரங்கு , கரப்பான், சீதபேதி, வயிற்றுவலி முதலியன உண்டாகும். பசிதீபனம் மட்டாகும்.
மாதுழம்பழம் :- இதனால், வாந்தி, கபம், விக்கல், தாகம், மாந்தம், சுரம், உஷ்ணாதிக்கம், பித்தாதிக்கம், இரத்தக்குறைவு முதலியன நீங்கும். மலத்தைக்கட்டும்.
உலர்ந்ததிராட்சைப்பழம் :- இது மேக அழலையை தணிக்கும். மலத்தை இளக்கும், உதிரப்பெருக்கையுண்டாக்கும்.
ஆழ்வள்ளிக்கிழங்கு :- இதனால் வாதாதிக்கம் ,திரிதோஷதொந்தம், குன்மம்,மந்தம், அக்கினி முதலியனஉண்டாகும்.
உருளைக்கிழங்கு :- இது பலத்தை தரும். வாய்வைக்கண்டிக்கும், மந்தத்தையுண்டாக்கும்.
காராக்கருணைக்கிழங்கு :- இதனால் வாதநோய், இரத்தமூலம், அக்கினிமந்தம் முதலியன குணமாகும். பத்திய உணவாம்.
சேப்பங்கிழங்கு :- இது கபத்தை விரித்திசெய்யும், மருந்தின் குணத்தை கெடுக்கும்.
இஞ்சி :- இதனால் சந்நிசுரம், வாந்தி, பேதி,சூலை, வாதாதிக்கம்,காசம்போம், பசிதீபனத்தையும், ஜீரணசக்தியையும், உண்டாக்கும்.
மஞ்சள் :- இதனால் தலைவலி, ஜலதோஷம், வலி, வீக்கம், வாந்தி,விரணம் முதலியன போம், பசி தீபனமும், புருஷ வசியமும் உண்டாகும்.
முள்ளங்கி :- இதனால் குன்மம்,சூலை, குடல்வாதம், வாய்வு,கரப்பான், மூலகடுப்பு,கபம், முதலியன குணமாகும். பசிதீபனமும், சிறுநீரையும் அதிகரிக்கும்.
வாழைக்கிழங்கு அல்லது தண்டு :- இது சிறுநீரைப்பெருக்கும், கல்லடைப்பு, மகோதரம், மூத்திரக் கிரிச்சரம், சோபை முதலிய நோய்கட்கு சிறந்தது.
வெங்காயம் :- இது தேக உஷ்ணம், மூலம், இரத்தபித்தநோய், சிரங்கு முதலியன குணமாகும்.
ஆல்பகோராப்பழம் :- இது உஷ்ணத்தையும், பித்தத்தையும், அரோசகத்தையும் நீக்கும். மலத்தை இளக்கும்.
இளநீர் :- இது சூட்டைத்தணிக்கும்,சிறுநீரைப்பெருக்கும், பித்தகோபத்தையும், கபாதிக்கத்தையும் அடக்கும்.
எலுமிச்சம்பழம் :- இதனால் பித்தாதிக்கம், பைத்தியம்,கண்ணோய், வாந்தி, தாகம், பசியின்மை, அஜீரணம், பேதி முதலியன குணமாகும்.
பழம்புளி :- பழைய புழியினால், திரிதோஷம்,வாதநோய், சூலை, வாந்தி, உஷ்ணாதிக்கம் முதலியன குணமாகும்.
பிரண்டை :- பசிமந்தம், அஜீரணம் , சூன்மம், அதிசாரம், கபதோஷம், இரத்தமூலம், முதலியன குணமாகும்.
பச்சைமிளைகாய் :- இதனால் வாதாதிக்கம், துத்திரோகம், இடுப்புவலி, சீதள சைத்தியம், முதலியன குணமாகும்.
விழாம்பழம் :- விழாம்பழத்தினால் சுவாசம்,காசம், பித்தாதிக்கம், பித்ததாகம், முதலியன குணமாகும். பசிதீபனமுண்டாகும்.
வெள்ளைப்பூண்டு :- இதனால் வாதம், சன்னிபாதம், கபாதிக்கம், சீதபேதி, நீரேற்றம், முதலியன குணமாகும்.
கரும்பு :- கரும்பின் சாற்றால் வாய்க்குமட்டல், வாந்தி,விக்கல், பித்தநோய்கள் முதலியன குணமாகும்.
சர்க்கரை :- இதனால் பித்ததோஷம், வமனம், அரோசகம், குணமாகும். கபத்தை இளக்கும். மருந்துகளுக்கு சிறந்த அனுபானமாகும்.
கற்கண்டு : - இதனால் கபதோஷம், வாந்தி, காசம், வெப்பம் முதலியன குணமாகும்.
பனங்கற்கண்டு : - இதனால் வெப்பம், மூத்திரகிரிச்சரம்,உஷ்ணதாகம் முதலியன குணமாகும்.
பனைவெல்லம் :- இதனால் குன்மம், வாந்தி, அரோசகம், திரிதோஷதொந்தம். முதலியன குணமாகும்.
---