விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, December 23, 2011

தோட்டத்து மூலிகைகளும் மருத்துவ பயன்களும்



தோட்டத்து மூலிகைகளும் மருத்துவ பயன்களும்

ஆடாதோடை :- இதற்கு கோழையை அகற்றுஞ் செய்கையும், இசிவை அகற்றுஞ் செய்கையுமுண்டு. இதனால் இருமல், இரைப்பு, இரத்தபித்தம் முதலியன குணமாகும். இதன் இலைச்சுரம் 1/2 தேக்கரண்டிவீதம் தேன்கூட்டிகுடுக்க, இருமல், கபக்கட்டு முதலியன குணமாகும். ஆடாதோடையுடன் சிறிது திப்பிலி அதிமதுரம், சிற்றரத்தை முதலியவைகளை சேர்த்து முறைப்படி குடிநீரிட்டும் வழங்க மேற்கூறிய நோய்கள் குணமாகும்.

ஆமணக்கு இலை :- இதற்கு வாதத்தை அடக்குஞ் செய்கையும், பாலைப்பெருக்கும் செய்கையுமுண்டு, இந்த இலையை குறுக்கு அரிந்து ஆமணக்கு நெய்விட்டு வதக்கி கீல்வாயு, வாதரத்த வீக்கம், இவைகட்கு ஒற்றிடமிட்டு வரகுணமாகும். ஆமணக்கு இலையை ஆமணக்கு நெய்விட்டு
வதக்கி ஸ்தனங்களில் வைத்துக்கட்ட பாற்சுரப்பு உண்டாகும்.

துளசி :- இதற்கு கோழையை அகற்றுங்குணமுண்டு. இதனால் இருமல், இரைப்பு, சலதோஷம், மார்புச்சளி முதலியன குணமாகும். இதன் இலையை சரசம் செய்து குழந்தைகளுக்கு 10 துளி வீதமும், பெரியவர்களுக்கு 1/2தேக்கரண்டிவீதமும் தேன்சேர்த்து கொடுத்துவர மேற்கூய பிணிகள் குணமாகும். மற்றும் இது கோரோசன மாத்திரை கஸ்தூரி மாத்திரை முதலிய கபபிணிகட்கு வழங்கும் மருந்துகளுக்கு சிறந்த அனுபானமாகும்.

கண்டங்கத்திரி :- இதற்கு கோழையை அகற்றுஞ் செய்கையும், சிறு நீரைஅகற்றுஞ் செய்கையுமுண்டு. இதனால் சுரம், காசம், சுவாசம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாறு 1/2 முதல் 1 தேக்கரண்டிவீதம் கொடுத்துவர காசம், சுவாசம் கபகட்டு முதலியன குணமாகும். இதன் சமூலத்தை குடிநீரிட்டு கொடுக்க கபசுரம், காசம், சுவாசம் முதலியன குணமாகும்.

கரிசாலை :- இது உடலைத்தேற்றும், இதில் இரும்புச்சத்து உள்ளது. இதனால் பாண்டு, சோபை, காமாலை, காசம், முதலியன குணமாகும். கரிசாலை இலையுடன் சமன்மிளகு சேர்த்து அரைத்து 1-2 சுண்டக்காய் அளவு மோரில் கொடுத்துவர பாண்டு, சோபை, காமாலை, காசம், முதலியன குணமாகும். கரிசாலை சாற்றுடன் சமன் நல்லெண்ணெய் கூட்டிப் பதமுறக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு 1 தேக்கரண்டிவீதம் உண்டு வர காசம் குணமாகும். கரிசாலை சாறுடன் சமன் நெல்லிக்காய்ச்சாறும் நல்லெண்ணெய் சேர்த்துப்பதமுறக் காய்ச்சி வடித்து முடித்தைலமாக வழங்கி வர உடல் காங்கை, கண்ணெரிச்சல், கண்காசம், செவிநோய் முதலியன குணமாகும். இதன் இலைக்கற்கத்தை கற்பமாகவும் உண்பதுண்டு.

கீழ்காய் நெல்லி :- இதற்கு துவர்ப்பு, குளிர்ச்சி செய்கைகள் உண்டு. இதனால் தாதுவெப்பம், பிரமேகம், முதலியன குணமாகும். இதன் சமூலத்தை அரைத்து கொட்டைப்பாக்களவு தினம் இருவேளை மூன்று நாள் உப்பில்லாப்பத்தியத்துடன் கொடுத்துவர காமாலை குணமாகும். மற்றும்
இதனால் வெள்ளை வெட்டை, பெரும்பாடு முதலியவைகளும் குணமாகும். இதன் கற்கத்தை ல்லெண்ணெயிலிட்டு தைலமாகக்காய்ச்சி முடித்தைலமாக வழங்க பித்தாதிக்கம், விழிநோய்கள் முதலியன குணமாகும்.

குப்பைமேனி :-இதற்கு வமனத்தை உண்டாக்கி கோழையை வெளிப்படுத்தும் செய்கையும் குடலிலுள்ள  கிருமிகளைக் கொல்லுஞ் செய்கையும் உண்டு. இதனால் கபாதிக்கம், சர்வவிஷம், புண், முதலியன குணமாகும். இதன் இலைச்சாற்றில் குழந்தைகட்கு 1 தேக்கரண்டிவீதமும், பெரியவர்களுக்கு 1/2 அவுன்சு வீதமும் கொடுக்க பேதியாகும். மலக் கிருமிகளை வெளிப்படுத்தும். இருமலைத் தணிக்கும். இலையை உலர்த்தி சூரணித்து 10 குன்றி எடை வீதம் தேனில் கொடுத்துவர இருமல், இரைப்பு, கபாதிக்கம் முதலியன குணமாகும். இதன் இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு,புண், விஷக்கடிகள் முதலியவை களுக்கு பூச குணமாகும்.

உத்தாமணி :- இதற்கு வமனத்தை உண்டாக்கி கோழையை வெளிப்படுத்தும் செய்கையுமுண்டு, இதனால் கபகட்டு, சுவாசம், மாந்தம், மலக்கிருமி முதலியன குணமாகும். இதன் சாற்றில் 1/2 தேக்கரண்டியாவது அல்லது இதன் குடிநீரில் சங்களவையாது குழந்தைகட்கு கொடுக்க வாஎதியாகி
கோழை வெளிப்படும். இருமல் சுவாசகாசம் முதலியன குணமாகும். இன்னும் இது வயிற்றிலுள்ள மலக்கிருமிகளை வெளியாக்கி, மந்தத்தை நீக்கி, தீபனத்தையுண்டக்கும். இதன் இலைசாற்றுடன் சிறிது உப்பும், வசம்பு சுட்டசாம்பலும் சேர்த்து கருக்கியாழமாகசெய்து குழந்தைகளுக்கு காணும் அள்ளுமாந்தம், அசீரணபேதி முதலியவைகட்கு வழங்குவதுண்டு.

ஊமத்தை :- இதற்கு இசிவகற்றி வேதனாசாந்தினி செய்கைகளுண்டு, இதனால் கட்டி, விரணம் நஞ்சுகளின் விஷம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் சமன் தேங்காயெண்ணெய் சேர்த்து காய்ச்சி இரண்டொரு துளி வீதம் காதில் துளித்துவர காது வலி குணமாகும். இன்னும்
இத்தைலத்தை விரணங்களுக்கும் மேற் பூசிவர விரைவில் ஆறும். இலையை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கியாவது அல்லது அரிசி மாவுடன் சேர்த்து களிபோல் கிளறியாவது வித்திரிகட்டிகள், வாதவீக்கம் இவைகளுக்கு வைத்துக்கட்ட, அல்லது ஒற்றிடமிட குணமாகும். இதன் இலை அல்லது பூவைப்பொடித்து புகைப்பிடிக்க சுவாசகாசம் குணமாகும்.

எருக்கு :- இதற்கு சுரமகற்றி, கபஹரகாரி, புழுக்கொல்லி, முதலிய செய்கையுமுண்டு. இதனால் முறைசுரம், கபநோய், கிருமிநோய், வாதநோய், பாம்புவிஷம் , எலிவிஷம் , முதலியன குணமாகும். இலையை வதக்கி கட்டிகளுக்கு வைத்துக்கட்ட, பழுத்துடையும். வாதநோய், வலிவீக்கம்
இவைகளுக்கு ஒற்றிடமிடலாம். இதன் பூவுடன்சமன் எடை அளவு மிளகு சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரைகளை செய்து கொடுக்க சுவாசகாசம் முறைசுரம் முதலியன குணமாகும். எருக்கம் பாலுடன் சமன் எண்ணெய் சேர்த்து தைலமாககாய்ச்சி வாதகுடச்சல், இசிவு முதலியவைகட்குப்
பூசிப்பிடிக்க குணமாகும்.

சீந்தில் :- இதற்கு முறை சுரமகற்றி, பித்தமகற்றி, உடல்தேற்றி முதலிய செய்கையுமுண்டு. இதனால் சுரம், ரத்தம், இரத்தபித்தம், மேகம் முதலியன குணமாகும். இதனை தனியாகவாவது அல்லது பேய்புடல், பற்பாடகம், கோரைக்கிழங்கு முதலியவற்றுடன் சேர்த்தாவது குடிநீரிட்டு கொடுக்க
முறைசுரம், பித்தசுரம் முதலியன குணமாகும்.இதன் முற்றின கொடியினின்று ' சீந்திர்சர்கரை 'என்ற சத்து தயாரிப்பதுண்டு. இதில் வேளைக்கு 2முதல்5 குன்றி வீதம் பாலில் கொடுத்துவர  சுரம், உட்சுரம், பித்தாதிக்கம், காமாலை, மதுமேகம், மூத்திரப்பிணிகள், சுரங்களுக்குப்பின் காணும் உடற்சோர்வு முதலியன குணமாகும்.

சித்திரமூலம் :- இதனால் மேகநோய்கள் வாதநோய்கள் , குன்மம் முதலியன குணமாகும். இதன் வேர்பட்டையை பால் விட்டு அரைத்து கற்கம் சிறு இலந்தைவிதைப்பிரமாணம் தினம் ஒரு வேளை வெள்ளாட்டுப் பாலில் கலந்து 5அல்லது7 நாள் பத்தியத்துடன் அருந்திவர  மூலம், கிரந்தி, அரையாப்பு, புரையோடும்,விரணம், மேகசூலை முதலியன குணமாகும். சித்திரமூலவேர்பட்டையை பச்சையாக எடுத்து அரைத்து எண்ணெயிலிட்டு காய்ச்சி முடித்தைலமாக உபயோகிக்க தலைபாரம், நீர்பீநசம், வாதப்பிணிகள் முதலியன குணமாகும்.

நாயுருவி :- இதனால் மந்தம், அதிசாரம், கபநோய், உதிரச்சிக்கல், குன்மம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாறு அல்லது குடிநீர் வயிற்றுவலி, குன்மம் இவைகட்கு வழங்கப்படும். இதன் வேர் சூரணத்துடன் மிளகுச் சூரணம் அல்லது திப்பிலி சூரணத்துடன் சேர்த்து தேனில் அருந்த இருமல் தீரும். விதை கற்கத்தை அரிசி கழுவியநீரில் கரைத்து அருந்திவர இரத்தமூலம், அதிசாரம், முதலியன குணமாகும். இதன் சமூலத்தைச்சுட்டு சாம்பலாக்கி 5 குன்றி எடை வீதம்  வெல்லத்தில் கொடுக்க உதிரச்சிக்கலை நீக்கும்.

துத்தி :-இதற்கு மலத்தை இளக்கல், உள்ளழலை முதலிய செய்கையுமுண்டு. இதனால் மூலம், கட்டி, முதலியன குணமாகும். இதன் இலையை சமைத்தாவது அல்லது குடிநீரிட்டாவது, மூலச்சூடு ச்சிக்கல் முதலியன குணமாகும். இலையை ஆமணக்கெண்ணெய்விட்டு வதக்கி மூலத்திற்கு ஒற்றிடமிட்டு, அவ்விடத்திலேயேகட்டி வர வேதனை தணியும். இதன் இலைச்சாற்றுடன் பச்சரிசி மாவு சேர்த்து களி கிளறி கட்டிகளுக்கு வைத்துகட்ட பழுத்துடையும்.

வல்லாரை :- இதற்கு உடலைத்தேற்றல், உடலுக்குப் பலந்தருதல், மேகப் பிணிகளை விலக்கல், முதலிய செய்கையும் உண்டு.இதனால் பித்தம், மேகநோய், குஷ்டம், மூலை, நரம்பு, பலவீனம் ஞாபகசக்தி குறைவு முதலியன குணமாகும். இதன் இலைச்சூரணம் 2முதல்5 குன்றி எடை வீதம் ஒரு மண்டலம் அருந்த சர்மவியாதிகள், மேகநோய்கள், பைத்தியம், ஆரம்பகுட்டம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் நெய் சேர்த்து கிருதமாக காய்ச்சி அருந்திவர நரம்பு பலவீனம், ஞாபகசக்திகுறைவு ,கணமாந்தம், இளைப்பு முதலியன குணமாகும்.

காக்கட்டான் :- இதற்கு மலத்தைப்போக்கல், சிறுநீரை பெருக்கல் முதலிய செய்கையும் உண்டு. இதனால் மலக்கட்டு, மலக்கிருமி, பிரமேகம், யானைக்கால்வாதம் முதலியன குணமாகும். இதன் விதையை இளவறுப்பாய் வறுத்திடித்துச்சூரணஞ்செய்து 15-20 குன்றியளவு கொடுக்க நன்றாக பேதி யாகும். இதன் வேர் கற்கம் சிறு கழற்சியளவு அல்லது வேரை ஊறல் குடிநீராகவும் செய்து வழங்கலாம். இதனால் பேதியாவதுடன் யானைக்கால், சுரம், வாதம்,வாதாதிக்கம், மலக்கிருமி முதலிய
நோய்கள் குணமாகும்.

புங்கு :- இதனால் கிரந்தி,புண், சொறி, சிரங்கு, கரப்பான் முதலிய நோய்களும், சர்மவியாதிகளும் மேகநோய்களும் குணமாகும். புங்கம் பூவை வறுத்திடித்து சூரணித்து திரிகடிபிரமாணம் தினம் இரு வேளையாக ஒரு மண்டலம் அருந்த மேற்கூறிய நோய்கள் குணமாகும். புங்கம் பாலுடன் தேங்காய் பாலை சேர்த்து தைலபதமாக காய்ச்சி வடித்து விரணங்களின் மேல்தடவி வர விரைவில் ஆறும்.

ஆவாரை :- இதற்கு சங்கோசனகாரி, பலகாரி, முதலிய செய்கையும் உண்டு. இதனால் வெள்ளை, வெட்டை, கிரகணி, உட்சூடு, நீரிழிவு, முதலியன குணமாகும். இதன் உலர்ந்த பூ அல்லது பட்டையை, 1/2 பலம் எடுத்து முறைப்படி குடிநீரிட்டுக்கொடுக்க நீர்சுருக்கு, பிரமேகம், நீரிழிவு, தாகம்,
தேக காங்கை ,கிரகணி பெரும்பாடு முதலியன குணமாகும். ஆவாரை இலை வேர், பட்டை, பூ, காய் என்ற பஞ்சாங்கங்களையும் சமனெடையாக சூரணித்து கலந்து வேளைக்கு 1/2 முதல் 1 வராகனெடை வீதம் தினம் இரு வேளையாக அருந்திவர மதுமேகம் முதலியன குணமாகும்.

அவுரி :- இதற்கு கிருமிநாசினி, வெப்பகற்றி நஞ்சகற்றி செய் கைகளுண்டு. இதனால் சுரம், சன்னி, விஷக்கடி தாவரகந்தமூலவிஷம் முதலியன குணமாகும். அவுரி இலை அல்லது வேரைக் குடிநீரிட்டுக் கொடுக்க எல்லா விஷங்களையும் முறிக்கும். அவுரி வேருடன் சமன் மிளகு சேர்த்து குடிநீரிட்டு கொடுக்க வாதசுரம் சன்னிபாசுரம் விஷக்கடிகள் அதனாலுண்டான சுரம் முதலியன குணமாகும்.

இலைக்கள்ளி :- இதற்கு கபஹரகாரி விரேசனகாரி செய்கைகள் உண்டு. இதனால் குழந்தைகட்கு உண்டாகும்கருங்கிரந்தி, செங்கிரந்தி, கபாதிக்கம், மாந்தம்,மலக்கட்டு முதலியன குணமாகும். இதன் இலையை வதக்கிப் பிழிந்தச்சாறு 2-3 துளி காதில்விட காதுவலி குணமாகும். இதன் இலைச்சாற்றை குழந்தைகட்கு அரைத் தேக்கரண்டி வீதம் தாய்ப்பாலில் கொடுக்க இருமல், இரைப்பு, கபக் கட்டு கரப்பான் முதலியன குணமாகும். மலங் கழியும்.

கொடிக்கள்ளி :- இதன் பாலுடன் வேப்பெண்ணெய் சேர்த்து காய்ச்சி வாத நோயகளுக்கு மேலுக்கு பூசிப்பிடிக்க குணமாகும்.

நொச்சி :- இதன் வேர் குடிநீர் அல்லது வேர் சூரணம் 5-10 குன்றி எடை தேனில் கொடுக்க சுரம், வாதநோய், இசிவு, வாத சுரம் முதலியன குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் எண்ணெய் சேர்த்து காய்ச்சி முடித்தைலமாக வழங்க சிரோபாரம், நீர் கோவை, பீநசம் குணமாகும்.

பொடுதலை :- இதன் இலையை வதக்கி, வறுத்த ஓமத்துடன் சேர்த்தரைத்து நீர் சேர்த்துகுடிநீரிட்டு சங்களவு வீதம் குழந்தை கட்கு வழங்க அஜீரணபேதி, மாந்தம், முதலியன குணமாகும். இதன் இலை கற்கத்தை நல்லெண்ணெய்யிலிட்டு சூரியபுடமாக வைத்தெடுத்து மேலுக்கு தடவிவர தலையில் உண்டாகும் பொடுகு, புழு வெட்டு, மயிர் உதிர்தல் முதலியன குணமாகும்.

அம்மாம்பச்சரிசி :- இதன் சமூலத்தை அரைத்து கொட்டைப்பாக்களவு பால் அல்லது மோரில் தினம் ஒரு வேளை வீதம் ஏழு நாள் கொடுக்க, வெள்ளை வெட்டை குணமாகும்.

சிறு பீளை :- இதன் இலைச்சாறு ஒரு அவுன்சு வீதம் கொடுக்க நீரடைப்பு, கல்லடைப்பு பெரும்பாடு முதலியன குணமாகும்.

நல்வேளை :- இதன் இலை கற்கம் அல்லது குடிநீர் கொடுக்க வாதநோய்கள் குணமாகும். இதன் இலைச்சாற்றுடன் எண்ணெய் சேர்த்து காய்ச்சி மேலுக்கு தடவிவர வாதப்பிடிப்பு குடைச்சல் முதலியன குணமாகும்.

வாத நாராயணன் :- இதற்கு இலகு மலகாரி, வாதமரஹாரி செய்கைகள் உண்டு. இதனால் வாதநோய்கள் குணமாகும். இதன் இலையை வாத நோய்க்கு ஒற்றிடமிடப் பயன்படும். மற்றும் இதனைச்சேர்த்து தைலமாக காய்ச்சி வாதநோய்க்கு உள்ளுக்கும் வழங்குவதுண்டு.

தழுதாளை :- இதன் இலையை நீரிட்டுகாய்ச்சி வாதவலியுள்ள பாகங்களில் தாரையாக விட்டுவர நோய் குணமாகும். இதன் இலை அல்லது வேரை எணெய்யிலிட்டு காய்ச்சி வாதப் பிடிப்புகளுக்கும் தடவுவதுண்டு.

விழுதியிலை :- இதன் இலையை குடி நீரிட்டு அத்துடன் சிறிது ஆமணக்கு நெய் சேர்த்து கொடுக்க பேதியாகி, வாத நீரை வெளிப்படுத்தி, வாதப்பிணிகள் குணமாகும். இதன் இலையை நீரிட்டுகாய்ச்சி வதவலியுள்ள பாகங்களில் விட்டுவர நோய் குணமாகும்.

முட்சங்கன் :- இதன் இலைச்சாறு கோழையை வெளிப்படுத்தி, இருமலை தணிக்கும். இதன் வேரை குடி நீரிட்டு கொடுக்க முறைசுரம், குன்மம், வாதநோய், சோபை குழந்தைகட்கு காணும் மாந்தம், சுரம், இருமல் முதலியன குணமாகும்.

சங்ககுப்பி :- இதன் இலைக் குடிநீர் முறை சுரத்தைக் குணமாக்கும். மற்றும் இதனால் இரத்தம் சுத்தப்பட்டு மேக நோய்கள் குணமாகும்.

அசோகு:- இதன் மரப்பட்டையை இடித்து சாறு எடுத்துதாவது அல்லது குடிநீரிட்டாவது கொடுத்து வர சீத ரத்தபேதி, பெரும்பாடு முதலியன குணமாகும். இது கருப்பைக்கு உரத்தைத்தரும்.

அத்தி :- அத்திப்பிஞ்சை சமைத்துண்ண மூலச்சூடு வயிறுக்கடுப்பு முதலியன தீரும். அத்திப்பட்டையை குடி நீரிட்டு கொடுக்க சீத ரத்தபேதி, பெரும்பாடு பிரமேகம் முதலியன குணமாகும். அத்திப் பழம் மலத்தை இளக்கும்.

இஞ்சி :- இதற்கு வயிற்றுலுள்ள வாயுவை கண்டித்து, பசிதீயையும், ஜீரணத்தையும் உண்டாக்கும் செய்கைகள் உண்டு. இதனால் சுரம்,சந்தி, வாதசோபம், பித்தாதிக்கம், வாந்தி, மயக்கம், அஜீரணம், பேதி, கபம், முதலியன குணமாகும். இஞ்சிச் சாறு அல்லது இஞ்சிக்கற்கத்தில் திப்பிலிச் சூரணத்தி சேர்த்துக் கொடுக்க இருமல், இரைப்பு, குன்மம், அஜீரணப் பேதி, முதலியன குணமாகும். இஞ்சிச் சாறுடன் சமன் பாலும் சர்க்கரையும் சேர்த்து மணப்பாகு செய்து அருந்திவர பித்தாதிக்கம், வாந்தி, அஜீரணம், அரோசகம் முதலியன குணமாகும். இஞ்சிச் சாறுடன் சமன் பாலும் நல்லெண்ணெய்யும் சேர்த்து தைலமாக காய்ச்சி முடித்தைலமாக உபயோகிக்க நீர், பீனசம், தலைவலி முதலியன குணமாகும்.

எலுமிச்சை :- இதற்கு பித்தனாசினி குளிர்ச்சியுண்டாக்கி செய்கைகள் உண்டு. இதனால் பித்தமயக்கம், வாந்தி, தாகம் முதலியன குணமாகும். எலுமிச்சம்பழச் சாற்றுடன் சர்க்கரை சேர்த்து நீருடன் கலந்து குடிக்க பித்தமயக்கம், வாந்தி, தாகம் முதலியன குணமாகும். சீரகத்தை தேன் விட்டு வறுத்து, அத்துடன் பழச்சாறு சேர்த்து நீர் விட்டு குடிநீரிட்டு வழங்க நேர்வாளம் முதலிய பேதி மருந்துகளினால் ஏற்பட்ட அடங்காத வாந்தி
யும் பேதியும் குணமாகும்.

தராயிலை :- இதனால் விரணம் கிரந்தி முதலியன குணமாகும். பெண்களுக்குண்டாகும் உதிரச் சிக்கல் நீங்கும். இந்த இலையை அரைத்து கிரந்தி பிளவை கட்டி முதலியவைகட்கு மேலுக்கும் போட்டுவர விரைவில் ஆறும்.

பிரமதண்டு :- இதனால் சொறி சிரங்கு, புண், மேகப்பிணிகள் முதலியன தீரும். இதன் இலைச்சாறு 2-முதல் 4-தேக்கரண்டி வீதம் தினம் ஒரு வேளையாக காலையில் அருந்திவர மேற்கண்ட நோய்கள் தீரும். இதன் பால் கண்ணோய்கட்கும், வித்து மேக நோய்கட்கும் உதவும்.

இம்பூரல் :- இதனால் இருமல், இர்த்தகாசம், பித்த கோபம், இரத்தவாந்தி முதலியன குணமாகும். இதன் வேரை உலர்த்தி இடித்துச் சூரணித்து திரிகடி பிரமாணம் கற்கண்டு தூள் சேர்த்து தினம் இருவேளையாக பாலில் அருந்தி வர மேற்கண்ட நோய்கள் குணமாகும்.

நாவல் :- இதன் பட்டையை சூரணித்தாவது குடிநீரிட்டாவது அருந்திவர சீதபேதி, இரத்தபேதி, பெரும்பாடு முதலியன குணமாகும். இதன் கொட்டையைத் தூள்செய்து கல்வத்திலிட்டு ஆடு தின்னாப்பாளை சாறுவிட்டு இரண்டு மூன்று நாள் அரைத்து குன்றியளவு மாத்திரைகள் செய்து நிழலிலுலர்த்தி வேளைக்கு 1-மாத்திரை வீதம் தினம் 2-வேளையாக ஒரு மண்டலம் அருந்திவர நீரிழிவு மதுமேகம் குணமாகும்.

நெருஞ்சில் :- இதற்கு சிறுநீரைப் பெருக்குஞ் செய்கையுண்டு. இதனைத் தனியாகவாவது அல்லது நீர்முள்ளி, சுரைக்கொடி, சிறுபிளை போன்ற சரக்குகளுடனாவது சேர்த்து முறைப்படி குடிநீரிட்டுக் கொடுப்பதுண்டு. இதனால் நீர் நன்றாக போவதுடன் நீர்சுருக்கு நீரடைப்பு, கல்லடைப்பு, சோபை, மகோதரம் முதலியன குணமாகும்.










---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்